ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘இலங்கை தமிழர் பிரச்னையும்,
தமிழக மீனவர்கள் பிரச்னையும் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு இருந்தபோது 136 படகுகளை இலங்கை அரசு
கைப்பற்றிச் சென்றது. நாற்பது மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒன்பது
பேர் கடலுக்குள் குதித்து காணாமல் போய்விட்டனர்.
இந்நிலையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், இலங்கை பிரச்னையை முற்றிலுமாக
தீர்த்து வைப்போம் என்று நரேந்திர மோடி கூறுகிறார். இதனால், வாஜ்பாய்
ஆட்சியை குற்றம் சொல்கிறாரா என்று தெரியவில்லை.
நரேந்திரமோடி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்
அவர் எப்படி இந்தியாவின் பிரதமராக வர முடியும். அவருக்கு பிரதமராகக் கூடிய
தகுதி இல்லை.இயற்கை வளங்களை எக்காரணத்தைக் கொண்டும் தனியார்
நிறுவனங்களுக்கு தாரை வார்க்க கூடாது. அது இந்தியாவில் உள்ள நிறுவனங்கள்
ஆனாலும் சரி, வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள் ஆனாலும் சரி. இயற்கை வளங்களை
அரசே பயன்படுத்த வேண்டும். மேலும், ரயில்வே துறைக்கு எவ்வாறு தனிபட்ஜெட்
போடப்படுகிறதோ, அதேபோல வேளாண்மைக்கும் தனி பட்ஜெட் போடப்பட வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தம் பற்றி, தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ,
அதை நாடாளுமன்றத்தில் பேசி முடிவெடுக்க வேண்டும்.
தற்போது மத்திய அரசு கொண்டு வந்த எம்.பி., எம்.எல்.ஏக்களின் பதவி
பறிப்பு சட்டத்திற்கு ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது காங்கிரஸ்
கட்சியின் நாடகம் ஆகும்.
மத்திய அரசின் தவறான மக்கள் விரோத பொருளாதார கொள்கையை கண்டித்து வருகிற
5ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு எதிரே கம்யூனிஸ்ட்
கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
இதேபோல இந்தியா முழுவதும் வருகிற 3, 4, 5 தேதிகளில் போராட்டம்
நடைபெறும். தேர்தல் கூட்டணி பற்றி தேர்தல் தேதி அறிவித்த பின்பே முடிவு
செய்யப்படும்.
கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத கூட்டணியில் இடம்பெறும்.இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
No comments:
Post a Comment